ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில கட்டப்பட்ட கடைகள் , வீடுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகள், வீடுகள் அகற்றம்…!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வடக்கு கோபுர வாயில் முன்பாக 10 கடைகள் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேபோன்று வடக்குஅடையவளஞ்சான் வீதியில்,கோவில் மதில் சுவரை ஒட்டி 8வீடுகள் கட்டப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வீடுகள் மற்றும் கடைகளை அகற்றிக் கொள்ளுமாறு கடையின் உரிமையாளர்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்களிடம் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அகற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ( ஆகஸ்ட் 5) காலை கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லஷ்மணன், கோவில் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்துடன் கடைகளை அகற்றுவதற்கு வந்தனர். அப்போது அதிகாரிகள் 2 மணி நேரம் அவகாசம் தருகிறோம் அதற்குள் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினர். இல்லை என்றால் நாங்கள் அகற்றி விடுவோம் என தெரிவித்ததால் அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடைக்காரர்கள் நாங்கள் இது குறித்து நீதிமன்றம் சென்றுள்ளோம் அதனால்,
கடைகளை அகற்றக்கூடாது எனக் கூறினர். அதற்கு கோவில் அதிகாரிகள், இந்த கடைகளை அகற்றக் கூறி எங்களிடம் நீதிமன்ற உத்தரவு உள்ளது. நாங்கள் பலமுறை உங்களுக்கு கால அவகாசம் வழங்கி விட்டோம். கடந்த ஆண்டு இந்த கடைகளை அகற்ற வந்தபோது எழுத்துப்பூர்வமாக கால அவகாசம் கேட்டீர்கள். உங்களுக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்து விட்டோம். இன்றுவரை நீங்கள் கடையை காலி செய்யவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவின்படி கடைகளை அகற்றுகின்றோம் என கூறினர். அதனைத்தொடர்ந்து கடையில் இருந்த பொருட்களை வியாபாரிகள் எடுத்து வெளியே வைத்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கடைகள் மற்றும் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

