பிரபல நகைக்கடை உள்பட 2 இடங்களில் ஐடி ரெய்டு: ஆற்காட்டில் விடிய விடிய பரபரப்பு

0 1

ஆற்காடு: ஆற்காட்டில் உள்ள பிரபல நகைக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டுசெல்லப்படும் பணத்தை பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் அதிகளவு பண பரிமாற்றம் நடைபெறும் வங்கி கணக்குகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க வருமான வரித்துறை சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்னை வருமான வரித்துறையை சேர்ந்த உதவி ஆணையர் தேவி, கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆற்காடு பஜார் சாலையில் திருவள்ளுவர் சிலை அருகே கியான்சந்த் என்பவர் தனது மகன் குசால்சந்த் பெயரில் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நகைக்கடையின் வங்கி கணக்கில் இருந்து அதிகளவு பண பரிமாற்றம் நடைபெற்றது கண்காணிப்பு அதிகாரிக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கண்காணிப்பு அதிகாரி தேவி தலைமையிலான 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் நகைக்கடை மற்றும் கியான்சந்த் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விடியவிடிய விசாரணை நடத்தினர்.

இன்று காலை 7 மணியளவில் கியான்சந்த் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. பின்னர் வருமான வரித்துறை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்குமாறு வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். அதேநேரத்தில் நகைக்கடையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தேர்தல் காலம் என்பதால் அரசியல் கட்சியினருக்கு பண பரிமாற்றம் நடைபெற்றதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.