மாநகராட்சியின் பல்வகை பயன்பாட்டிற்காக ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா!

மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 31 புதிய வாகனங்கள், சென்னை என்விரோ சொலியூசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.30.65 கோடி மதிப்பீட்டில் 33 புதிய வாகனங்கள் என மொத்தம் ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை, தரக்கட்டுப்பாடு, அலுவலர்களின் களஆய்வு, நடைபாதை மற்றும் பேருந்து நிழற்குடைகளில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தல், நாய்கள் பராமரிப்பு, கடற்கரை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வகை பயன்பாட்டிற்கான 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று (12.01.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்துவதால் பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, இவ்விடங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தி தூய்மையாக பராமரிக்க 6 எண்ணிக்கையில் 2 KL கொள்ளளவு கொண்ட தண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் இலகுரக வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு மேயர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அலுவலர்களின் களஆய்வுப் பணிகளுக்காக புதியதாக 17 எண்ணிக்கையில் ஆய்வு வாகனங்கள், பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திடும் வகையில், மாநகராட்சியின் நாய்கள் பிடிக்கும் 6 வாகனங்கள், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை மற்றும் உத்தண்டி பகுதியில் உள்ள கடற்கரை மணற்பரப்பினை சுத்தம் செய்யும் பணிக்காக கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் வாகனம், சாலைப் பணிகள், மண்டலங்கள் மற்றும் துறைகள் சார்ந்த பல்வேறு கட்டுமானப் பணிகளின் இனங்களை பணிகள் நடைபெறும் இடத்திற்கு ஆய்வு உபகரணங்களை எடுத்துச் சென்று பரிசோதனைகள் செய்து தரத்தை உறுதி செய்வதற்காக, நடமாடும் தரக்கட்டுப்பாட்டு களஆய்வு வாகனம் என மொத்தம் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 31 வாகனங்களை மேயர் இன்று பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

