டி.எஸ்.பி., – எஸ்.ஐ., மீது வன்கொடுமை வழக்கு பதிவு

0 3

திருச்சி: பட்டியலினத்தவரின் நிலம் மோசடி புகாரை முறையாக விசாரிக்காமல் அலைக்கழித்த டி.எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., மீது நீதிமன்ற உத்தரவுப்படி, வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே உள்ள காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் பட்டியலினத்தை சேர்ந்த காந்தி. இவரது முன்னோருக்கு அரசு கொடுத்த நிலத்தை, அதே ஊரை சேர்ந்த அண்ணாதுரை என்ற மாற்று சமூகத்தை சேர்ந்தவர் ஆக்கிரமித்து, அது தனக்கே சொந்தம் என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அண்ணாதுரை மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய, 2021ல் புத்தாநத்தம் போலீசில் காந்தி புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்காத, அப்போதைய மணப்பாறை டி.எஸ்.பி., ஜனனி பிரியா, புத்தாநத்தம் எஸ்.ஐ., சூர்யா ஆகியோர், ‘இது சிவில் வழக்கு’ என்று கூறி, காந்தியை அவமதித்து, அலைகழித்துள்ளனர்.

இதுகுறித்து, காந்தி, திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், டி.எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, இருவரும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, புகாரை சரிவர கையாளாத டி.எஸ்.பி., ஜனனிப்பிரியா, எஸ்.ஐ., சூர்யா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய கடந்த நவம்பரில் உத்தரவிட்டார்.

அதன்படி, புத்தாநத்தம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, வன்கொடுமை உட்பட மூன்று பிரிவுகளில் டி.எஸ்.பி., – எஸ்.ஐ., மீது வழக்கு பதிவு செய்துள்ளார். வழக்கை விசாரிக்க விரைவில் டி.எஸ்.பி., அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுவார் என, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.