எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், 2026-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள்

0 4

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், 2026-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் எதிர்வரும் 11.12.2025 முதல் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிக்காக, 11 பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்., நிறுவனத்தின் (BEL) பொறியாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, 400 எண்ணிக்கையிலான Ballot Unit-கள் அரியலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்திட ஆணையிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையானது இன்று (09.12.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையிலும் திறக்கப்பட்டு 400 எண்ணிக்கையிலான Ballot Unit கள் அரியலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் இன்று (09.12.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் எதிர்வரும் 11.12.2025 முதல் முற்பகல் 09.00 முதல் பிற்பகல் 07.00 மணி வரை நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்விற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் உரிய ஒத்துழைப்பினை நல்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் மேற்படி கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 01.01.2026-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, கண்டறிய இயலாதவர்கள். இடம்பெயர்ந்தோர், இறப்பு. இரட்டைப்பதிவு மற்றும் இதர வாக்காளர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் 2 யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், மேற்படி பட்டியலினை சரிபார்த்து, மேற்படி பட்டியலில் எவரேனும் விடுபட்டிருப்பின் கள ஆய்வு செய்து அதன் விபரத்தினை மீள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 11.12.2025 க்குள் சமர்ப்பித்திட உரிய ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் எதிர்வரும் 11.12.2025 அன்று அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களால், Demographic Similar Entries (DSE) மற்றும் 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தொடர்பாகவும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் திரு.ஆர்.பாலாஜி, திருமதி.ர.ராஜலட்சுமி. திருமதி.முத்துமாரி, திருமதி.செந்தில்குமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.ஹென்றி பீட்டர். வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியின் மேற்பார்வையாளர் திரு.வி.சரவணன், தேர்தல் வட்டாட்சியர் திரு.சக்திவேல் முருகன். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.