திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி நிர்வாகிகள் மாநாடு

எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு, எஸ்டிபிஐ கட்சியின் மாநில அளவிலான ‘தொகுதி நிர்வாகிகள் மாநாடு’ எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சி சமயபுரத்தில் இன்று (செப்டம்பர் 13, 2025) நடைபெற்றது. இந்த மாநாட்டை, எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான இல்யாஸ் தும்பே தொடங்கி வைத்தார். மேலும், கட்சியின் அகில இந்திய செயலாளர் அப்துல் சத்தார், தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது பாரூக் உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக், ஏ. கே. கரீம் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸ்ருத்தீன், மாநில செயலாளர்கள் ஹமீது ஃப்ரோஜ், பாஸ்டர் மார்க், நஜ்மா பேகம், வழ.ஹஸ்ஸான், மாநில பொருளாளர் முஸ்தபா, வர்த்தகர் அணி மாநில தலைவர் அமீர் ஹம்ஸா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம், பஷீர் சுல்தான், முகம்மது ரஷீத், அஸ்கர் அலி, ரவிச்சந்திரன், ஜே.ஆர்.டேவிட், மகளிரணி விம் மாநில தலைவர் பாத்திமா கனி, எஸ்டிடியூ தொழிற்சங்க மாநில தலைவர் முகமது ஆசாத் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அஹமது நவவி வரவேற்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக் ஆகியோர் துவக்க உரை ஆற்றினர். தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையுரையாற்றினார். இந்ந மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் வாழ்த்துரையாற்றினார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தேர்தல் செயல்திட்டங்கள் குறித்து விளக்கினார். எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் உத்திகளை வலுப்படுத்துவது, அடிமட்ட அமைப்பை மேம்படுத்துவது, பூத்கமிட்டி பொறுப்பாளர்களுக்கான திட்டமிடல்கள், மற்றும் கட்சியின் சமூகநீதி கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து விரிவான விவாதங்களும் நடைபெற்றன. இறுதியாக மாநில செயலாளர் ஷபீக் அஹம்மது நன்றியுரையாற்றினார்.
தொடந்து பின்வரும் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பொருட்டு, எஸ்டிபிஐ கட்சி முழு உற்சாகத்துடனும், தீவிரமான ஈடுபாட்டுடனும் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் தொகுதி நிர்வாகிகளுக்கான மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில், தேர்தலை எதிர்கொள்வதற்கு தேவையான முழுமையான திட்டமிடல், உத்திகள், மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துதல், வாக்காளர் தொடர்பு மேம்பாடு, மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான வளங்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளை மேலும் திறம்பட செயல்படுத்துவதற்காக, பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டத்தை மண்டல அளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்களில், பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் நடைமுறைகள், வாக்குச்சாவடி மேலாண்மை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, மற்றும் தேர்தல் ஆணைய விதிமுறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், கட்சியின் கொள்கைகளை வாக்காளர்களிடம் திறம்பட எடுத்துச் செல்வதற்கான உத்திகள் மற்றும் பிரச்சார முறைகள் குறித்தும் இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் 2:
சமூகநீதியின் அடையாளமாக விளங்கும் தமிழ்நாட்டில், அரசியல் அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவத்தில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் மற்றும் விளிம்புநிலை சமூக மக்களின் பங்களிப்பு உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை முழுமையாக நிலைநாட்டுவதற்கு, அனைத்து சமூகங்களுக்கும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு, அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
தற்போது, பாராளுமன்ற, சட்டமன்ற அவைகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமத்துவம் மற்றும் சமூக நீதி உறுதி செய்யப்பட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் மற்றும் அதிகார பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்திட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகங்களின் பிரதிநிதித்துவத்துக்காக தொடர்ந்து குரலெழுப்பும் எஸ்டிபிஐ கட்சி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தை முன்னெடுக்கும் வகையில், முக்கிய அரசியல் கட்சிகள் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சிறுபான்மை உள்ளிட்ட சமூக மக்களின் பிரதிநித்துவத்தை அதிகரிக்கச் செய்திட சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3:
இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) குறித்து எஸ்டிபிஐ கட்சி ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்துகிறது. ஆளும் ஒன்றிய அரசின் அரசியல் நோக்கங்களுடன் ஒத்திசைவாக செயல்படும் வகையில் தேர்தல் ஆணையத்தின் இந்தத் திட்டம், இந்திய ஜனநாயகத்திற்கு கடும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், அதன் செயல்பாட்டு முறைகளால் பல கேள்விகளையும் கவலைகளையும் எழுப்புகிறது.
பீகார் மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் முன்னோடிப் பரிசோதனையின்போது, பெருமளவிலான உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர், இதனால் பலர் தங்கள் வாக்குரிமையை இழந்தனர். இது வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையம், ஆளும் அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படுவதாகவும், அதன் நடவடிக்கைகள் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளதாகவும் ஜனநாயக சக்திகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த சிறப்பு திருத்தப் பணியை மிகக் குறுகிய காலத்தில், போதுமான அவகாசம் வழங்காமல், அவசரமாக மேற்கொள்வது, உண்மையான வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதை சரிபார்த்து மீண்டும் பதிவு செய்யும் வாய்ப்பை இழக்கச் செய்யும்.
தமிழகத்திலும் இந்த அவசரமான திட்டம் கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம். உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது, வாக்குரிமையைப் பறிப்பது மட்டுமல்லாமல், தேர்தல் முடிவுகளின் நம்பகத்தன்மையையும் கேள்விக்கு உட்படுத்தும்.
ஆகவே, இந்த ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாமல் பாதுகாக்கப்பட, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இந்த வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி வலுவாக களமாடும். மேலும், அனைத்து ஜனநாயக சக்திகளையும், குறிப்பாக வாக்காளர்களையும், தேர்தல் ஆணையத்தின் இந்தத் திட்டத்தில் விழிப்புடன் இருக்குமாறும் எஸ்டிபிஐ கட்சி கேட்டுக்கொள்கிறது.
வாக்காளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். மேலும், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்காளர் பட்டியலை உருவாக்கும் பணியை, உண்மையான பிரதிநிதித்துவத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4:
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், 24 முக்கிய கனிமங்கள் மற்றும் 6 அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்களை ரத்து செய்துள்ளது. இந்த முடிவு மக்களின் கருத்து உரிமையைப் பறிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கதிர்வீச்சு அபாயங்களை அதிகரிக்கும் ஆபத்தான நடவடிக்கையாகும். சட்டத்தில் திருத்தம் செய்யப்படாமல், வெறும் அலுவலக உத்தரவு மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது மற்றும் ஏற்கத்தக்கதல்ல.
இந்த முடிவு, மக்களை கதிர்வீச்சு அபாயத்தில் தள்ளுவதோடு, சுற்றுச்சூழலை அழித்து, கடல் அரிப்பை தீவிரப்படுத்தி, மக்களின் வாழ்விடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். மேலும், இது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோக நலன்களுக்கு வழிவகுத்து, சுற்றுச்சூழலுக்கு பேரழிவை விளைவிக்கும். அதுமட்டுமின்றி, இந்த முடிவு மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையாகவும் உள்ளது. கனிம வளங்களை ஒன்றிய அரசு ஏலம் விடுவது, அனுமதி வழங்குவது மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்காமல் செயல்படுத்துவது, மக்கள் விரோதமானது மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகவும் உள்ளது.
இந்த அநீதியான மற்றும் ஆபத்தான கொள்கையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆகவே, ஒன்றிய அரசு இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த முடிவுக்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என இந்த மாநாடு கோருகிறது.
தீர்மானம் 5:
பாலஸ்தீன் காஸாவில், 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் பயங்கரவாத பேரழிவுத் தாக்குதல்களால் ஒட்டுமொத்த காஸாவும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் குழந்தைகள் உள்பட சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 17 லட்சம் காஸா மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்துவதால் தினந்தோறும் 50 பேர் வீதம் பட்டினியால் மரணத்தை தழுவுகின்றனர். சுமார் 200க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள், 300க்கும் அதிகமான ஐ.நா. ஊழியர்கள் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய மனித உரிமை மீறல்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட முடியாதவை.
பாலஸ்தீனத்துடன் மட்டுமல்லாமல், கத்தார், லெபனான், சிரியா, ஈரான், மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவது, மேற்கு ஆசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்ரேலின் இந்த அநியாய, அராஜக மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவும் உலகம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.
இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, உலகின் பல நாடுகள் இஸ்ரேல் மீது விரிவான பொருளாதார மற்றும் இராணுவத் தடைகளை விதிக்க வேண்டும் என ஐ.நா.வை வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், அமெரிக்காவின் ஆதரவு இஸ்ரேலுக்கு தொடர்ந்து அநியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி செய்கிறது. இதற்கு எதிராக, உலகளவில் பல நாடுகள் இஸ்ரேலுடனான தங்கள் உறவுகளை மறுபரிசீலனை செய்து, பல நாடுகள் உறவை முற்றிலும் துண்டித்துள்ளன.
ஆகவே, இந்தியாவும் பயங்கரவாத இஸ்ரேலுடனான அனைத்து உறவையும் முற்றிலும் துண்டிக்க வேண்டும். இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மனிதாபிமான அடிப்படையில் தமிழக சட்டமன்றத்திலும் தமிழக அரசு கண்டன தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6:
சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் வாழ்நிலை குறித்து அறிய, சச்சார் கமிட்டி போன்றதொரு கமிட்டியை அமைத்து, முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அனைத்து விதமான திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், முஸ்லிம்களுக்கு சமூக-பொருளாதார வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பையும், சம பங்கீட்டையும் மேம்படுத்தும் வகையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தித்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் தேர்தல் வாக்குறுதிப்படி, பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் அனைவருடைய விடுதலையை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு உயர் பதவிகளில் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி, பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி போன்ற உயர் பதவி பணிகளில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

