தாளவாடி மலைப்பகுதியில் கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டம்

தாளவாடி மலைப்பகுதியில் கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டம்
பொதுமக்கள் பீதி
சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் பகல் நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களில் நடமாடும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குட்டிகளுடன் தாளவாடி அருகே உள்ள அருளவாடி கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டங்கள் மற்றும் தரிசு நிலங்களில் முகாமிட்டன.
யானைகள் நடமாட்டத்தை கண்ட பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து காட்டு யானைகளை சத்தம் போட்டு வனப்பகுதி நோக்கி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து ஜீரஹள்ளி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாடுவதால் தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் தங்களது அன்றாட விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்ததோடு, கால்நடைகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் சிரமத்திற்கான ஆளாகினர்.

