சேதுபதி காசுகளில் கணபதி!

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சேதுபதி காசுகளில் கணபதி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
சங்க கால நாணய சேகரிப்பாளர் முகமது சுபேர் பிரிட்டிஷ் இந்திய நாணய சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் சேதுபதி காசுகளில் கணபதி தலைப்பில் பேசுகையில், சேதுபதி மன்னர்கள், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஆட்சி செய்த, மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு அரச குலமாகும். 12 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை தன்னாட்சி பெற்று, “சேதுபதி” (பாலத்தின் பாதுகாவலர்) என்ற பட்டத்துடன், இராமநாதபுரம் இராச்சியத்தை ஆண்டனர். இவர்கள், இராமர் பாலம் தொடர்புடையப் பகுதியைப் பாதுகாத்து, சோழ பாண்டிய நாயக்கர் காலங்களுக்குப் பிறகு தன்னாட்சி பெற்ற சுதந்திர அரசர்களாக விளங்கினர்.சேதுபதி செம்பு உலோக 1.8 கிராம் எடையுள்ள காசுகளில் கணபதி உருவத்தை அச்சிட்டு உள்ளார்கள். காசின் முன் பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார் பின்பக்கத்தில் செதுபதி என்று இரண்டு வரிகளில் தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது என்றார்.

