ரிஷாப் பன்ட் துணிச்சல் அரைசதம்: எலும்பு முறிவுடன் களமிறங்கினார்

0 9

 

மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில், கால் விரல் எலும்பு முறிவுடன் துணிச்சலாக களமிறங்கிய ரிஷாப் பன்ட், அரைசதம் விளாசினார். நாட்டுக்காக வலியை பொருட்படுத்தாது போராடிய இவரை, ரசிகர்கள் போற்றுகின்றனர். ஐந்து போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’ தொடரில் இங்கிலாந்து அணி, 2–1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்தியா முதல் இன்னிங்சில் 264/4 ரன் எடுத்திருந்தது.

ரிஷாப் அரைசதம்: இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆர்ச்சர் ‘வேகத்தில்’ ரவிந்திர ஜடேஜா (20) அவுட்டானார். ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் 6வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தனர். கேப்டன் ஸ்டோக்ஸ் பந்தில் ஷர்துல் (41) வெளியேறினார். பின் காயத்துடன் களம் கண்ட துணை கேப்டன் ரிஷாப் பன்ட் அசத்தினார். லேசான மழை குறுக்கிட்டதால், உணவு இடைவேளை முன்னதாக எடுக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 321/6 ரன் எடுத்திருந்தது.

பின் ஸ்டோக்ஸ் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் (27), கம்போஜ் (0) ‘பெவிலியன்’ திரும்பினர். டெஸ்டில் 18வது அரைசதம் அடித்த ரிஷாப் (54, 3×4, 2×6), ஆர்ச்சர் பந்தில் போல்டானார். பும்ரா (4) நிலைக்கவில்லை. இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

பவுலர்கள் தடுமாற்றம்: அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கிராலே (84), டக்கெட்(94) வலுவான துவக்கம் தந்தனர். இந்திய பவுலர்கள் ஏமாற்றினர். அறிமுக அன்ஷுல் கம்போஜின் முதல் ஓவரில் டக்கெட் 3 பவுண்டரி அடித்தார். பும்ரா, சிராஜ் ஓவரிலும் பவுண்டரிகள் பறந்தன. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 225/2 ரன் எடுத்து, 133 ரன் பின்தங்கியிருந்தது. போப் (20), ரூட் (11) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் கம்போஜ், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

90 ‘சிக்சர்’
ஆர்ச்சர் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ரிஷாப் பன்ட். இதன் மூலம் டெஸ்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை சேவக் உடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் 90 சிக்சர் அடித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.