கிட்னி முறைகேடு வழக்கு; தமிழக அரசு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு

0 3

கிட்னி முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறுநீரகத்தை தானம் பெற்றனர். திருச்சி, பெரம்பலுாரில் இரு தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டன. ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ”கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (அக் 10) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ”சிறப்பு புலனாய்வுக்குழுவை எதிர்க்கவில்லை, அதிகாரி நியமனத்தை மட்டுமே எதிர்க்கிறோம். நாங்கள் தரும் அதிகாரிகள் பட்டியலில் தகுதியானவர்களை நீதிமன்றம் நியமிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம்கோர்ட் நிராகரித்தது. கிட்னி முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்த ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.