மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (30.08.2025) சென்னை வண்டலூர் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி வளாகத்திலிருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.

0 8

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (30.08.2025) செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு, திருச்சிராப்பள்ளி துவாக்குடி தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ், செயல்படுகின்ற அலுவலகங்களில் 401-உதவிப்பொறியாளர்கள், 124-உதவிப்பொறியாளர்கள் (திட்டமிடல்). 15-இளநிலைப் பொறியாளர்கள். 189-இளநிலைப் பொறியாளர்கள் (திட்டமிடல்), 207 தொழில்நுட்ப உதவியாளர்கள், 126-படவரைவாளர்கள், 167-பணி மேற்பார்வையாளர்கள், 354-பணி ஆய்வர் மற்றும் 431-துப்புரவு ஆய்வர்கள் என மொத்தம் 2014 பணியாளர்கள் இது வரை பணியில் சேர்ந்துள்ளனர்.

நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்புகள் 30.08.2025 முதல் 30.09.2025 வரை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

 

தமிழ் நாட்டில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் நகர்புறங்களில் பொது மக்கள் வசித்து வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி பல்வேறு தொழில் நிறுவனங்கள் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு அருகில் உள்ள பகுதிகள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அருகில் செயல்பட தொடங்கியுள்ளன. இதனால் குடிநீர். சாலைகள் வசதி, மழைநீர் வடிகால்கள், மின்வசதி போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்ற துறைகள் போல் இல்லாமல் நகராட்சி நிருவாகத் துறை என்பது மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு முக்கிய துறையாகும். நகர்ப்புற பகுதிகளில் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் சிறப்பாக சென்றடையும் வகையில் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். அடிப்படை கல்வி தகுதிகளில் பல சாதனைகளை புரிந்து இருந்தாலும், நடைமுறையில் பணிகளை மேற்கொள்வதற்கு முறையான பயிற்சிகள் வழங்கினால் மட்டுமே அலுவலர்களின் செயல்பாடுகள் பொது மக்களின் பாராட்டுகளை பெறமுடியும். மேலும், பொதுமக்களோடு நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொது மக்களின் தேவைகளை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து நிலை பணியாளர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அலுவல் ரீதியான கோப்புகளை எப்படி கையாளுவது, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தினசரி மேற்கொள்ளப்படும் அன்றாட பணிகளோடு பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும். எனவே ஒரு மாதம் காலம் நடைபெறும் பயிற்சியினை பணியாளர்கள் அனைவரும் முறையாக பயிற்சி பெற்று சிறப்பாக பணியாற்றிட வேண்டும். தங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

நடைபெற்ற மாவட்ட திருச்சிராப்பள்ளி துவாக்குடி தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பயிற்சி வகுப்பு நிகழ்வில், ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப.,அவர்கள். மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பங்கேற்று நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களிடம் சிறப்பான முறையில் பணி மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தி உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் திரு.தாணுமூர்த்தி, அண்ணா பல்கலைக் கழக முதல்வர் முனைவர் திரு.செந்தில் குமார், நீர் வளத்துறையின் தலைமை இயக்குநர் மற்றும் தலைமை பொறியாளார் திரு.சு.ராஜா, நகரப் பொறியாளர் திரு.சிவபாதம், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.