மாணவர்களின் கல்வியை கெடுப்பது ஏன்: அண்ணாமலை கேள்வி

0 6

உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்துக் கெடுக்கிறீர்கள்?” என திமுக அரசுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், “ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை” என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன். உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?

ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.