நாட்டில் அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடிகள்: சுப்ரீம் கோர்ட் கவலை

0 7

 

டிஜிட்டல் கைது என மோசடி செய்து ஏமாற்றும் நிகழ்வுகள் குறித்த புகாரை தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் உதவும்படி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் டிஜிட்டல் கைது என மிரட்டி பணம் பறித்து ஏமாற்றும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக முதியவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த செப்., 3 முதல் செப்., 16 வரையிலான டிஜிட்டல் கைது முறையில் ஏமாந்து பணத்தை இழந்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த புகாரை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஆர்யமாலா பக்ஷி அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

சிபிஐ அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் மோசடியாளர்கள் தங்களை தொடர்பு கொள்கிறார்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு எனக்கூறி மோசடியாளர்கள் சில ஆவணங்களை வாட்ஸ்அப் அல்லது வீடியோ அழைப்பில் காட்டி கைது செய்யப்போவதாகவும், சொத்துக்களை முடக்கப் போவதாகவும் மோசடியாளர்கள் மிரட்டுகின்றனர். இதனை வைத்து ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து மோசடியாளர்கள் தங்களது வங்கிக்கணக்கிற்கு பணத்தை மாற்றுகின்றனர்.

இது குறித்த விசாரணையை துரிதப்படுத்தும்படி மாநில போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம். போலி ஆவணங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட்டின் முத்திரை பெயரை கிரிமினல்கள் பயன்படுத்துவது கவலையளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் அமைப்புகளின் கண்ணியத்தின் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதல். அத்தகைய கிரிமினல் நடவடிக்கைகளை வழக்கமான அல்லது சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தனர். இது குறித்து மத்திய அரசு, சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதுடன், இந்த வழக்கில் தங்களுக்கு உதவும்படி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.