காவிரி நீர் கடைமடை ஏரிகளுக்கு சென்றடையாத அவலம் ;வீணாக கடலுக்கு பாய்வதால்,விவசாயிகள் ஏமாற்றம்.

0 5

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு, காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வாயிலாக பல டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலந்து வரும் நிலையில், கல்லணை கால்வாய் வழியாக கடைமடை ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்றடையாத அவலம் நீடிக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா போன்றவை வறட்சி பகுதியாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சியில், ராணுவ பொறியாளர் கர்னல் டபிள்யு.எம்.எல்லிஸ், கல்லணை கால்வாயை செயற்கையாக வடிவமைத்தார்.

கல்லணை தலைப்பில் துவங்கி, புதுக்கோட்டை மாவட்டம், மும்பாலை வரை, 149 கி.மீ., துாரத்திற்கு இந்த கல்லணை ஆற்றில், ‘ஏ’ கால்வாயில் இருந்து ‘பி, சி, டி, இ’ என, 337 கிளை வாய்க்கால்கள் மொத்தம் 1,232 கி.மீ., நீளம் உள்ளன.

செயற்கையாக உருவாக்கப்பட்ட கல்லணை கால்வாயில் கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்காத வகையில், ஆற்றின் குறுக்கே ‘சைபன்’ எனப்படும் சுரங்கங்கள், ‘சூப்பர் பேஸேஜ்’ எனப்படும் மேல்நிலை கால்வாய்கள், பெருவெள்ள காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற, ‘அக்யுடக்ட்’ எனப்படும் கால்வாய் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தண்ணீரின் விசையை சீராக வைத்திருக்க, 505 இடங்களில், ‘டிராப்’ எனப்படும் நீரொழுங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லணை கால்வாய் மூலம், 2.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், 694 ஏரி, குளங்களும் பயன் பெறுகின்றன.

இதில், ஏரி குளங்களுக்கு தண்ணீர் செல்வது சங்கிலி தொடர் போன்றது. தற்போது வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளாலும், துார்ந்து போனதாலும், பல ஏரிகள் தண்ணீர் செல்லாமல் வறண்டும், குறைந்த அளவிலான தண்ணீரோடும் உள்ளன. இதனால், ஏரி பாசனத்தை நம்பியுள்ள திருவோணம், ஊராணிபுரம் மற்றும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் போன்ற கடைமடை பகுதி விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கீழ்குமுழி உடைந்தது மேற்பனைக்காடு ஆற்றில் இருந்து வீரக்குடி ‘பி’ பிரிவு கிளை வாய்க்கால் மூலம் ரெட்டவயல், மணக்காடு பகுதிகளுக்கு செல்லும் தண்ணீர், ஏரிகளுக்கு சென்று பாசனத்திற்காக பயன்படுகிறது. ஆனால், வீரக்குடி வாய்க்காலில் தண்ணீர் பிரிக்கும் கீழ்குமுழி பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. விவசாயிகள் மனு கொடுத்தும் அதை சீரமைக்காததால், தண்ணீர் வீணாக செல்கிறது. நீர்வளத் துறையில் நிதி இல்லையென அதிகாரிகள் கூறியதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விலைக்கு தண்ணீர் பாசன வாய்க்கால்களை முறையாக துார் வாராததாலும், ஆக்கிரமிப்புகளால் மறைந்து போனதாலும், ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பம்ப் செட் வைத்துள்ளவர்களிடம், ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வீதம் கொடுத்து, தண்ணீர் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.