பள்ளி சிறுவர்களுக்கு மது ஊற்றிக் குடிக்க வைத்த சம்பவம் – சிதம்பரத்தில் அதிர்ச்சி

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கடந்த 01.04.2025 அன்று டிரான்ஸ்பார்மர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சுகந்தன் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குற்றவாளி சுகந்தனை தேடி அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது, அவரது மனைவிக்கும் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் க்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல்துறையினர் தன்னை துன்புறுத்தியதாக சுகந்தனின் மனைவி வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்துள்ளார்.
இதுவரை குற்றவாளி சுகந்தன் கைது செய்யப்படாத நிலையில், அவரது பிறந்த நாளன்று பள்ளி சிறுவர்களுக்கே மதுபானம் கொடுத்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட அம்மன் கோவில் கிராமத்தில், 27 வயதுடைய ரௌடி சுகந்தன் என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி திரு. செந்தில் அவர்கள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
விசாரணையில்,
🔹 ஒரு சிறுவனை மிரட்டி, கை கால்களை கட்டி, வாயில் மதுபானத்தை ஊற்றியதாகவும்
🔹 மற்றொரு மாணவனை அடித்து மதுபானம் குடிக்க வைத்ததாகவும்
🔹 இன்னொரு மாணவனை மிரட்டி மதுபானம் குடிக்க வைத்து, அதனை வீடியோவாக எடுத்ததாகவும்
சிறுவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுங்கு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

