திருச்சி, பொன்மலைப்பட்டி அருகாமையில் துணிகர செயல்:- பெண் ஒருவரிடம் ஏழு பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபருக்கு வலை.

திருச்சியில் , கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பொன்மலை பகுதியில் வீட்டிற்கென காய்கறி வாங்கிக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, அந்த பெண்ணின் இரு சக்கர வாகனம் மீது மோதுவது போல வந்து நின்றார். இதனால், அந்தப் பெண் நிலை தடுமாறிய போது திடீரென்று அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு அந்த மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து, பொன்மலை காவல் நிலையத்தில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து இந்த வழிப்பறி சம்பவத்தில் உட்பட்ட மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

