‘விறுவிறுப்பான ‘ கட்டத்தில் ஓவல் டெஸ்ட்: ஹாரி புரூக், ஜோ ரூட் சதம்

0 7

லண்டன்: ஓவல் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்தின் ஹாரி புரூக், அனுபவ ஜோ ரூட் சதம் கடந்து கைகொடுத்தனர்.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன் – சச்சின் டிராபி) பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி உள்ளது. ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 396 எடுத்தது. இங்கிலாந்துக்கு 374 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து 50/1 ரன் எடுத்து, 324 ரன் பின்தங்கியிருந்தது.

 

டக்கெட் ‘அவுட்’: நான்காம் நாள் ஆட்டத்தில் சிராஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய டக்கெட் அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பிரசித் கிருஷ்ணா திருப்பம் ஏற்படுத்தினார். இவரது பந்தில் டக்கெட் (54) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் போப், அதிவேகமாக ரன் சேர்த்தார். கிருஷ்ணா ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். சிராஜ் ‘வேகத்தில்’ போப் (27) எல்.பி.டபிள்யு., ஆனார். இதற்கு ‘ரிவியு’ கேட்டும் பலன் கிடைக்கவில்லை. இங்கிலாந்து 106/3 ரன் எடுத்து தவித்தது.

 

பாஸ் பால்’ ஸ்டைல்: பின் அனுபவ ஜோ ரூட், ஹாரி புரூக் சேர்ந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். ‘பாஸ் பால்’ பாணியில் புரூக் அதிரடியாக ஆடினார். ஆகாஷ் தீப் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். பிரசித் கிருஷ்ணா ஓவரில் 16 ரன் விளாசினார். அபாரமாக ஆடிய புரூக், டெஸ்டில் தனது 10வது சதம் அடித்தார். இத்தொடரில் இவரது இரண்டாவது சதம். ஆகாஷ்தீப் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார் புரூக். அடுத்த பந்தையும் துாக்கி அடித்தார். இம்முறை சிராஜ் கச்சிதமாக பிடிக்க, புரூக் (111, 14×2, 2×6) அவுட்டானார். ஆகாஷ் தீப் பந்தில் 2 ரன் எடுத்த ரூட், டெஸ்ட் அரங்கில் 39வது சதம் எட்டினார். பெத்தல் (5) நிலைக்கவில்லை. சிறிது நேரத்தில் கிருஷ்ணா பந்தில் ரூட்(105, 12X4) அவுட்டாக ‘டென்ஷன்’ ஏற்பட்டது.

மழை குறுக்கீடு: தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 339/6 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை, மழையால் 4ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்த. ஜேமி ஸ்மித் (2) அவுட்டாகாமல் இருந்தார். வோக்ஸ் காயமடைந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட், இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன் தேவைப்படுகிறது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பவுலர்கள் அசத்தினால் இந்திய அணி சுலப வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம்.

 

சிராஜ் செய்த தவறு:

பிரசித் கிருஷ்ணா ஓவரின் முதல் பந்தை (34.1) ‘பைன் லெக்’ திசையில் துாக்கி அடித்தார் ஹாரி புரூக். இதை பிடித்ததும் தடுமாறிய சிராஜ், எல்லையில் இருந்த விளம்பர பலகை மீது வலது காலை வைத்து தவறு செய்தார். பின் எல்லைக்கு வெளியே சென்று முகத்தை கையால் மறைத்து அதிர்ச்சியில் உறைந்தார். இந்த ‘கேட்ச்’ நழுவவிட, ‘சிக்சர்’ ஆனது. இதை பயன்படுத்திய புரூக் இன்னும் இரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 16 ரன் எடுக்கப்பட்டன. 19 ரன்னில் சிராஜ் தயவில் கண்டம் தப்பிய புரூக், 111 ரன் எடுத்தார்.

* இந்திய அணியின் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. வாஷிங்டன் வீசிய பந்தை (60.4) புரூக் அடிக்க, அதை காலால் தடுக்க வீணாக முயற்சித்தார் ஆகாஷ் தீப். இறுதியில் பந்தை உதைத்து பவுண்டரிக்கு அனுப்பி வெறுப்பேற்றினார்.

* தனது பந்துவீச்சில் பெத்தல் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை ஆகாஷ் தீப் கோட்டைவிட்டார்.

 

மூன்றாவது அதிவேகம்
டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அதிவேக சதம் அடித்த மூன்றாவது இங்கிலாந்து வீரரானார் ஹாரி புரூக் (91 பந்து). முதல் இரு இடங்களில் ஜேமி ஸ்மித் (80 பந்து), டக்கெட் (88 பந்து) உள்ளனர்.

* குறைந்த இன்னிங்சில் 10 சதம் அடித்தவர் பட்டியலில் புரூக் 9வது இடத்தில் (50 இன்னிங்ஸ்) உள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன்(23 இன்னிங்ஸ்) உள்ளார்.

 

195 ரன்

ஜோ ரூட்-ஹாரி புரூக் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்தனர். இது நான்காவது இன்னிங்சில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து சார்பில் எடுக்கப்பட்ட 2வது அதிகபட்ச ரன். இதற்கு முன் 2002ல் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஜோ ரூட்-பேர்ஸ்டோவ் சேர்ந்து 269 ரன் சேர்த்ததே அதிகம்.

 

6000 ரன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அரங்கில் 6000 ரன் (69 போட்டி) எடுத்த முதல் வீரர் என சாதனை படைத்தார் இங்கிலாந்தின் ஜோ ரூட். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (4278 ரன், 55 போட்டி) உள்ளார்.

* டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை 500 ரன்+ (3 முறை) எடுத்த வீரரானார் ஜோ ரூட்.

* சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக முறை 50+ ரன் எடுத்தவரில் இரண்டாவது இடத்தை ஹெர்பி டெய்லர் (தெ.ஆ., எதிர், இங்கி.,) ஜோ ரூட் (எதிர், இந்தியா) பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 16 முறை 50+ ரன் எடுத்துள்ளனர். முதலிடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் (17 முறை, எதிர் இங்கி.,) உள்ளார்.

 

39வது சதம்
டெஸ்டில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறினார் ஜோ ரூட் (39 சதம்). முதல் மூன்று இடங்களில் சச்சின் (இந்தியா, 51), காலிஸ் (தெ.ஆ., 45), பாண்டிங் (ஆஸி., 41) உள்ளனர்.

* டெஸ்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தவர்களில் 2வது இடத்தை கவாஸ்கர் (இந்தியா, எதிர், வெ.இ.,), உடன் ரூட் (எதிர், இந்தியா) பகிர்ந்து கொண்டார். இருவரும் 13 சதம் அடித்துள்ளனர். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (19, எதிர், இங்கிலாந்து) உள்ளார்.

 

சுப்மன் ‘754’

அதிக ரன் குவித்த பேட்டர் வரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில், 4 சதம் உட்பட 754 ரன் எடுத்தார்.

 

சிராஜ் ’20’

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடம் பிடித்தார். ‘வேகத்தில்’ மிரட்டிய இவர், 5 டெஸ்டில், 20 விக்கெட் சாய்த்தார்.

 

வெஸ்ட் இண்டீசுடன் மோதல்
இந்திய அணி, அடுத்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. ஆமதாபாத்தில், வரும் அக். 2ல் முதல் டெஸ்ட் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், அக். 10-14ல் டில்லியில் நடக்கவுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.