ஒடிசாவில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: உயிருடன் புதைக்க முயன்ற வாலிபர்கள் கைது

புவனேஸ்வர்: ஒடிசாவில் 15 வயது சிறுமியை 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். அதில், சிறுமி கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து அவரை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவின் ஜக்தீஸ்பூர் மாவட்டத்தில் 15 வயதான சிறுமி ஒருவரை, பனஸ்பரா கிராமத்தைச் சேர்ந்த பாக்யதார்தாஸ் மற்றும் பஞ்சனன் தாஸ் என்ற சகோதரர்கள் மற்றும் துலு என்ற நபர் சேர்ந்து கடந்த சில மாதங்களாக கூட்டு பலாத்காரம் செய்து மிரட்டி வந்துள்ளனர்.
இதனால், அச்சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதனையறிந்த 3 பேரும் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க கூறியுள்ளனர். அதற்கு பணம் தரவும் தயாராக இருந்தனர். ஒரு கட்டத்தில், அச்சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்தனர்.
அங்கு ஒரு ஆள் உயரத்துக்கு பள்ளம் ஒன்றை தோண்டி வைத்து இருந்தனர். இதனை பார்த்த சிறுமிக்கு பயம் ஏற்பட்டது. உடனடியாக கர்ப்பத்தை கலைக்க வேண்டும். இல்லையென்றால், பள்ளத்தில் போட்டு மூடிவிடுவோம் என மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு வழியாக தப்பிய அந்தச்சிறுமி, தனது தந்தையிடம் வந்து நடந்ததை தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார்.
மாவட்ட தலைமை மருத்துவமனையில் அந்தச் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் பாக்கயதார் மற்றும் பஞ்சனன் ஆகியோரை கைது செய்ததுடன், தலைமறைவான துலு என்பவரை தேடி வருகின்றனர்.

